கனவில் அவள் வந்தாள் கனவிலும் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி எனக்கொரு பிரச்சினை என்றாள். . நான்கு கைகளோடு நின்ற அவளைக் கண்டு மிரண்டு, யார் நீங்கள்? என்றேன். என் பெயர் காமாட்சி ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
கணவனால் பிரச்சினை இல்லை பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் கல்போல் நிற்பவன் கணவனா என்றாள்.
.புரியவில்லையே என்றேன். தினம் தினம் நான் அவமானத்தால் செத்துப் பிழைக்கிறேன் என் பெண்மை கேவலப்படுத்தப்படுகிறது என்று உடைந்தாள்.
நான் பதட்டமாகிப் போனேன் அய்யோ உங்களையா? யார் அவன்? என்றேன். கோயில் குருக்கள் என்றாள்.
குருக்களா! என்ன செய்தார் அவர்? அதிர்ச்சியாகக் கேட்டேன்.
தினம் தினம் கருவறையின் கதவுகளை உட்பக்கமாக சாத்திக்கொண்டு என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்… என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவமானத்தால் கதறி விட்டாள்.
பின் நிதானித்து குருக்கள் வாயில் மந்திரம் இருக்கலாம் மரியாதை இருக்கலாம் ஆனால் இதை பெண்ணின் மனநிலையில் புரிந்து கொள் அவமானம் புரியும் என்றாள்.
சரிதான், ஆனால் இதற்கு என்ன செய்ய முடியும் என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு. ச்சீ… இப்படிக் கேட்க உனக்கு வெட்கமாக இல்லை? உக்கிரமாகிப் போனாள் காமாட்சி. கோபத்தோட தொடர்ந்தாள் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு உரிமையும் ஒதுக்கீடும் வேண்டும் என்று கேட்கிறீர்களே கோயில் கருவறைக்குள் குருக்களாக அர்ச்சகர்களாக பெண்களை அனுமதித்தால் உங்கள் புனிதம் என்ன நாறி விடுமோ? என்று காறித் துப்புவது போல் கேட்டு நிலம் நடுங்க சலங்கை உடைய தீயைப் போல் போனாள் காஞ்சி காமாட்சி.